Facebook Badge

Wednesday, October 29, 2014

மனுஷன்டா பகுதி - 2

"மூணு பசங்களையும் நல்லா பாத்துக்கங்கம்மா...அடிக்கடி வீட்டுக்கு வாங்க....ரங்கநாதர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும்போது அப்படியே இந்த வீட்டுக்கும் வந்து போங்க..."என்று கூறிய அந்த வீட்டு ஒனரம்மாவிடம், "நிச்சயம் வரேங்க" என்றவாறே புது வாடகை வீட்டுக்கு தனது மூன்று பசங்களையும் அழைத்துக்கொண்டு நடந்தார் தேவியம்மா.

கீழ் தளத்தில் ஐந்து குடித்தனங்களும் மேல் தளத்தில் வீட்டு ஒனரம்மாவும் குடியிருந்த அந்த முகப்பு ஒட்டு வீட்டிற்கு தனது எதிர்காலத்தை வாழ்ந்து பார்க்க குடிவந்த அந்த அம்மாவுக்கு அப்போது தெரியவில்லை அவரது எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கப்போவதில்லை என்று...[யாருக்குத்தான் தெரியும்]...

ஓட்டில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியே வீட்டினுள் பாய்ந்த சூரிய ஒளி போல வாழ்வு மலருமென்று தேவியம்மா நினைத்துக்கொண்டிருந்த அதே வேளையில் அவரது கணவர் தனது வாழைப்பழக்கடையில் சோகமாக "என்னப்பா இப்படி நஷ்டம் ஆகிடுச்சே " என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்..."உடுப்பா உனக்கென்ன மூணும் ஆம்பளப்பசங்க தானே...சொத்தா செத்து வைக்கப்போற...கவலைப்படாதே...வா குடிக்கப்போவோம்...கவலைய மற" என்று அழைத்த நண்பருடன் சென்ற தேவியம்மாவின் கணவருக்கு அப்போது தெரியவில்லை...அந்த மது, அவரின் வாழ்வின் கடைசி நாள் கடைசி நொடி வரை அவருடன் வாசம் புரியப்போகிறது என்று...

Thursday, July 24, 2014

மனுஷன்டா பகுதி - 1

மனுஷன்டா
பகுதி - 1
கடும் குளிர் இருக்கும் கார்த்திகைமாதம் ஆரம்பம்....அய்யப்ப பக்தர்கள் மாலை தருவித்து சாலையில் நடமாடிக்கொண்டிருக்க...
அந்த மார்வாடி ஆஸ்பத்திரி வாசலில் முழங்கால் மடித்து குத்திட்டு உட்காந்துகொண்டிருந்த இரு கிராமத்து பெண்மணிகளில் ஒருவர் இரு விரல்களை வாயில் வைத்து புளிச்சென்று வெற்றிலையை ஒரு பக்கமாகத்துப்பி, ''பாத்தியா...நம்ம முருகேசனுக்கு மூணாவதும் ஆம்பளப்புள்ள பொறந்திருக்கு'' என்று சந்தோஷமாக கூறினார்....
ஆமாம் என்று அந்த சந்தோஷத்தை உள்வாங்கிய இன்னொருவர் வேகமாக எழுந்து அண்ணே என்று சந்தோஷமாக கூவியவாறே முன்னாள் நகர்ந்தார்...அங்கே வேகமாக வந்து கொண்டிருந்த முருகேசனைப்பார்த்து ''அண்ணே...நீ பால் வாங்க போனவுடனே நர்சம்மா வெளியே வந்தாங்க....உனக்கு ஆம்பளப்புள்ள புறந்திருக்காம்...இன்னும் அரை மணிநேரம் ஆகுமாம்....பாக்க...சொன்னாங்க...''என்று பூரிப்பாய் கூற...'முருகா' என்று ஆனந்தப்பட்ட முருகேசன் அவரை கேள்வியாய்ப் பார்த்தார்...
உடனே..."ஆங்...அண்ணியும் நல்லாருக்காங்கலாம்" என்றார் அந்த பெண்மணி...
''தேவி''...என்று மனதில் மனைவியின் செல்லப்பெயரை மருகியவாறே மேலே பார்த்து ஆஸ்பத்திரியின் உள்நுழைந்தார் முருகேசன்.......
இரு பெரும் தூண்களை இரு பக்கங்களிலும் கொண்டு நடுவே பீதாம்பரர் புகைப்படம் இருந்த அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் உள்ளே நுழைந்து எதிர் பக்கம் இருந்த மாடிப்படிகளின் வழியே மேல் ஏறி இடதுபுறம் திரும்பிய முருகேசன், வலது பக்கம் இருந்த அறைகளை பார்த்தவாறே முன்னேறி நடந்தார். மூடியிருந்த மூன்றாவது அறையின் வாசலில் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கதவு திறக்கக்காத்திருந்தார். 15 நிமிடம் கழித்து அவரைத்தேடிக்கொண்டு வந்த அவரது நண்பர்கள், அவர் உட்காந்திருப்பதைப்பார்த்து "என்ன முருகையா, குழந்த பொறந்துடுச்சா?" என்றவாறே வந்தனர்.
முருகேசன், புன்முறுவலுடன் "ஆம், பையனாம்..நர்சம்மா சொன்னாங்களாம்" என்றார்.
"ஒ, மூணாவதும் பையனா? வாழ்த்துக்கள்" என்றவாறே கை கொடுத்த நண்பர்களைப்பார்த்து, "நேரம் ஆவுன்னு நினைக்கிறேன்...நீங்க போங்க, சாயந்திரம் நம்ப வாழைப்பழக்கடைக்கு வரேன்..பேசுவோம்...நாளைக்கு வந்து பாத்துக்கலாம்" என்று கூறவே நண்பர்கள் கிளம்பினர்.
மூன்று நாள் கழித்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகிய பஞ்சவர்ணம் என்ற தேவியம்மா, முதல் இருமகன்களை அழைத்து "தம்பிகளா, இங்க பாருங்க இன்னொரு தம்பி பாப்பா" என்றவாறே குழந்தைகளை அணைத்து கொஞ்சிய காட்சி கண்கொள்ளாமல் இருந்தது.

முன்னுரை

முன்னுரை:
சிறு வயதில் கிரைம் நாவல் மன்னர் திரு.ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை திரு பிராபகர் போன்றோரின் நாவல்கள் வாசித்ததுதான் எனக்கும் புத்தகத்திற்க்குமான பரிச்சய ஆரம்பம். அது தவிர நாள்தோறும் செய்தித் தாள்கள் வாசித்ததும் தமிழ் நன்கு உச்சரிக்க பேச முடிந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக எம் தந்தையார் தமிழாசிரியர் என்பதால் தமிழ் சரளமாக லாவகமாக பேச எழுத படிக்க முடிந்தது.
பிற்பாடு 2012ஆம் ஆண்டு முதல் முகப்புத்தகத்தில் தொடர்ந்து தமிழில் நிலைத்தகவல்கள் இடுவதும், நண்பர்களின் பதிவுகளைப்படிப்பதும், தமிழில் சரிதை எழுதவேண்டும் என்ற ஆவல் உருவானது.
தற்போது எழுத்துச்சித்தர் திரு பாலகுமாரன்  அவர்களின் உடையார், கங்கை கொண்ட சோழன் நாவல்கள் படிப்பது இன்னும் உத்வேகத்தைக்கொடுத்து எழுதத்தூண்டியது.

அவ்வாறு எழுத ஆரம்பித்ததுதான் இந்த 'மனுஷன்டா' என்ற கதை.
இது சுய சரிதை அல்ல. ஆனால் சரிதை தான்.

வாழ்த்துக்களை எதிர்பார்த்து.