Facebook Badge

Thursday, July 24, 2014

மனுஷன்டா பகுதி - 1

மனுஷன்டா
பகுதி - 1
கடும் குளிர் இருக்கும் கார்த்திகைமாதம் ஆரம்பம்....அய்யப்ப பக்தர்கள் மாலை தருவித்து சாலையில் நடமாடிக்கொண்டிருக்க...
அந்த மார்வாடி ஆஸ்பத்திரி வாசலில் முழங்கால் மடித்து குத்திட்டு உட்காந்துகொண்டிருந்த இரு கிராமத்து பெண்மணிகளில் ஒருவர் இரு விரல்களை வாயில் வைத்து புளிச்சென்று வெற்றிலையை ஒரு பக்கமாகத்துப்பி, ''பாத்தியா...நம்ம முருகேசனுக்கு மூணாவதும் ஆம்பளப்புள்ள பொறந்திருக்கு'' என்று சந்தோஷமாக கூறினார்....
ஆமாம் என்று அந்த சந்தோஷத்தை உள்வாங்கிய இன்னொருவர் வேகமாக எழுந்து அண்ணே என்று சந்தோஷமாக கூவியவாறே முன்னாள் நகர்ந்தார்...அங்கே வேகமாக வந்து கொண்டிருந்த முருகேசனைப்பார்த்து ''அண்ணே...நீ பால் வாங்க போனவுடனே நர்சம்மா வெளியே வந்தாங்க....உனக்கு ஆம்பளப்புள்ள புறந்திருக்காம்...இன்னும் அரை மணிநேரம் ஆகுமாம்....பாக்க...சொன்னாங்க...''என்று பூரிப்பாய் கூற...'முருகா' என்று ஆனந்தப்பட்ட முருகேசன் அவரை கேள்வியாய்ப் பார்த்தார்...
உடனே..."ஆங்...அண்ணியும் நல்லாருக்காங்கலாம்" என்றார் அந்த பெண்மணி...
''தேவி''...என்று மனதில் மனைவியின் செல்லப்பெயரை மருகியவாறே மேலே பார்த்து ஆஸ்பத்திரியின் உள்நுழைந்தார் முருகேசன்.......
இரு பெரும் தூண்களை இரு பக்கங்களிலும் கொண்டு நடுவே பீதாம்பரர் புகைப்படம் இருந்த அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் உள்ளே நுழைந்து எதிர் பக்கம் இருந்த மாடிப்படிகளின் வழியே மேல் ஏறி இடதுபுறம் திரும்பிய முருகேசன், வலது பக்கம் இருந்த அறைகளை பார்த்தவாறே முன்னேறி நடந்தார். மூடியிருந்த மூன்றாவது அறையின் வாசலில் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு கதவு திறக்கக்காத்திருந்தார். 15 நிமிடம் கழித்து அவரைத்தேடிக்கொண்டு வந்த அவரது நண்பர்கள், அவர் உட்காந்திருப்பதைப்பார்த்து "என்ன முருகையா, குழந்த பொறந்துடுச்சா?" என்றவாறே வந்தனர்.
முருகேசன், புன்முறுவலுடன் "ஆம், பையனாம்..நர்சம்மா சொன்னாங்களாம்" என்றார்.
"ஒ, மூணாவதும் பையனா? வாழ்த்துக்கள்" என்றவாறே கை கொடுத்த நண்பர்களைப்பார்த்து, "நேரம் ஆவுன்னு நினைக்கிறேன்...நீங்க போங்க, சாயந்திரம் நம்ப வாழைப்பழக்கடைக்கு வரேன்..பேசுவோம்...நாளைக்கு வந்து பாத்துக்கலாம்" என்று கூறவே நண்பர்கள் கிளம்பினர்.
மூன்று நாள் கழித்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகிய பஞ்சவர்ணம் என்ற தேவியம்மா, முதல் இருமகன்களை அழைத்து "தம்பிகளா, இங்க பாருங்க இன்னொரு தம்பி பாப்பா" என்றவாறே குழந்தைகளை அணைத்து கொஞ்சிய காட்சி கண்கொள்ளாமல் இருந்தது.

முன்னுரை

முன்னுரை:
சிறு வயதில் கிரைம் நாவல் மன்னர் திரு.ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை திரு பிராபகர் போன்றோரின் நாவல்கள் வாசித்ததுதான் எனக்கும் புத்தகத்திற்க்குமான பரிச்சய ஆரம்பம். அது தவிர நாள்தோறும் செய்தித் தாள்கள் வாசித்ததும் தமிழ் நன்கு உச்சரிக்க பேச முடிந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக எம் தந்தையார் தமிழாசிரியர் என்பதால் தமிழ் சரளமாக லாவகமாக பேச எழுத படிக்க முடிந்தது.
பிற்பாடு 2012ஆம் ஆண்டு முதல் முகப்புத்தகத்தில் தொடர்ந்து தமிழில் நிலைத்தகவல்கள் இடுவதும், நண்பர்களின் பதிவுகளைப்படிப்பதும், தமிழில் சரிதை எழுதவேண்டும் என்ற ஆவல் உருவானது.
தற்போது எழுத்துச்சித்தர் திரு பாலகுமாரன்  அவர்களின் உடையார், கங்கை கொண்ட சோழன் நாவல்கள் படிப்பது இன்னும் உத்வேகத்தைக்கொடுத்து எழுதத்தூண்டியது.

அவ்வாறு எழுத ஆரம்பித்ததுதான் இந்த 'மனுஷன்டா' என்ற கதை.
இது சுய சரிதை அல்ல. ஆனால் சரிதை தான்.

வாழ்த்துக்களை எதிர்பார்த்து.

Friday, March 29, 2013

இமயமலையில் ஹர ஹரி [கேதார்/பத்ரி] அனுபவம் - கடைசி பாகம்


நாராயணன் பெருமை


19.08.2010 காலை  7.10 க்கு  
சந்திரபுரியில்[ கவுரிகுண்டத்தில் இருந்து பத்ரி நாதர் ஆலயம் செல்லும் வழியில் உள்ள ஊர்] அறையை காலி செய்துவிட்டு, மீண்டும் பயணம் ஆரம்பம். 9.15 க்கு ஆள்  அரவமற்ற  மலைப்பாதையில் எங்கள்  வண்டி  மட்டும்  நின்றது
காரணம்  பாதையில் மலைசரிவு. பெரிய பாறை  ஒன்று  மலையில்  இருந்து  உடைந்து  பாதையை  அடைத்து, விட்டேனா  வழியை  என்றது. ஒன்றன்பின்  ஒன்றாக  வண்டிகள்  சேர்ந்தது
அனைவரும்  ஒன்று  சேர்ந்து  அசைக்கின்றோம். அசைய  மாட்டேன்  என்றது  பாறை. எங்கிருந்தோ வந்தார்  அவ்வூர் காவலர். எங்கோ  தகவல்  கொடுத்தார்
வந்தார்கள்  4 வாலிபர்கள்  சம்மட்டி , கடப்பாரையோடு. 20 நிமிடத்தில்  பாறையை  பிளந்து உடைத்தார்கள்
கங்கையில்  தள்ளினார்கள் உடைந்த பாறைகளை
1.30 மணி  நேர  போராட்டத்திற்கு  பிறகு  வழி  கிடைத்தது
மீண்டும்  பயணம். 3.45 க்கு ஜோஷிமாத் என்ற  இடத்திற்கு  வந்தோம். அங்கிருந்து பத்ரிநாத் 45  கிலோ மீட்டர்கள்
அங்கே குறிப்பிட்ட கால இடைவெளியில், ராணுவத்தினர் கேட் போட்டிருப்பர் நாங்கள் சென்ற நேரத்தில் 4.30 மணியில் இருந்து  5.00 மணிவரை ஒரு செட் வண்டிகளை பத்ரிநாத் நோக்கி  அனுமதிப்போம் என்றனர்
அதன்பிறகு  வரும்  வண்டிகள்  அடுத்த  நாள்  தான் பத்ரிநாத்  செல்ல  முடியும். இறைவனுக்கு நன்றி கூறி, கேட் திறக்க காத்திருந்தோம்.....
4.30 க்கு  கேட்  திறந்து எங்களையும்  மற்ற  வண்டிகளையும்  அனுமதித்தார்கள். மீண்டும்  பயணம்
ஒரு  மணி  நேரத்தில்  ஒன்றன்பின்  ஒன்றாக  பல  வண்டிகள்  நிற்க  நாங்களும்  நிற்கிறோம் . காரணம்  அதே போன்ற ஒரு பெரிய மலைசரிவு மற்றும் நீர்வீழ்ச்சின்  குறுக்கீடு
ஒரு  குவாலிஸ்  நீர்வீழ்ச்சியில் மாட்டிக்கொள்ள, டிக்கர் வைத்து  அதை  பின்னாலிருந்து  தள்ள  ,குவாலிஸ் நீர்வீழ்ச்சில் இருந்து  தப்பித்து  சென்றது. இதனால்  பெரிய  வண்டிகளை  மட்டும்  அனுமதித்தார்கள் .
இறைவனை  வேண்டியபடியே  நாங்கள்  அந்த   மலைசரிவையும், நீர்வீழ்ச்சியையும்  கடந்தோம்
பத்ரி நாதர் திருக்கோவிலை இரவு 7.30 மணிபோல் அடைந்தோம்.... அங்கேயே வாடகைக்கு அறை எடுத்து பொருட்களை  வைத்தோம்
உடனே நாராயணனை காண கோயிலுக்கு  கிளம்பினோம்
இங்கு  நடக்க  தேவை  இல்லை.
அறைக்கு  அருகிலேயே பத்ரிநாதர் திருக்கோயில். ....
அதோ கோவில்....ஆஹா...புகைப்படங்களில் பார்த்த கோவிலை நேரில் தரிசிக்கிறோமே ...என்ற சிலிர்ப்பு....

ஓம் நமோ நாராயணய நமஹ....பத்ரி நாதா சரணம்........கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா...
.
.
.
.

இங்கும்  அன்றைய  கடைசி  கால பூஜை
கண்ணார கண்ணனை கண்டோம். [ அருகிலேயே லட்சுமி குபேரரை தரிசித்தோம்... வெளியே  வந்தோம்
கோவில் நடை சுற்றி அங்கிருந்த லட்சுமி, ஆஞ்சநேய சன்னதிகளில் வணகிவிட்டு, குழந்தைகளுக்கு குங்குமம் இட்டு பிரசாதம் வாங்கி உண்டோம்.
புகைப்படம்  எடுத்தோம்.
எத்திராஜன், நான், ராஜா MG
 தம்பி செந்தில், மனைவி மகனுடன் அண்ணன் மகனும் [சிவா]
 நண்பர் எத்திராஜன் தந்தை, எத்திராஜன் , மனைவி பிரியா, தாய் மற்றும் இரு குழந்தைகள்
 தம்பி மகன்[தேவேஷ்வரன்], அண்ணன் மகன் [சிவ வர்னேஷ்வர்]
 நண்பர் எத்திராஜன் மனைவியுடன்
 நண்பர் ராஜா MG
 தம்பி, தேவேஷ், சிவா


யாத்திரைகுழு - பத்ரிநாதர் தலம் முன்....
நிற்பவர்கள்:
பிரியா எத்திராஜன், கார்த்திகா செந்தில், விஜயலட்சுமி மாதவன், விஜய்லெனின்[யாத்திரைக்குழு தலைவர்], ராஜா, அருண்காந்தி, ஆனந்தன், ராமலிங்கம், ராஜாMG , மாதவன்.
அமர்ந்திருபவர்களுக்கு முன்வரிசை:
 தேவேஷ்வரன், சிவ வர்னேஷ்வர், பாபு
இரண்டாம் வரிசை: மணி, பாலாஜி,
மூன்றாம் வரிசை: எத்திராஜன், ஸ்டாலின், செந்தில்,
நான்காம் வரிசை: சந்தியா, சௌந்தர்யா[எக்ஸ்ட்ரா டிக்கெட்]


அறைக்கு திரும்பினோம். வாழ்வில் முதல் முறை கேதரரையும் பத்ரி நாதரையும் தரிசித்த பூரண களைப்பில் தூங்கினோம்.

.
.
.
மறுநாள்
20.08.2010  காலை 4 மணிக்கு  எழுந்து அங்கும் காணப்படும் ஒரு வெந்நீர் குளத்தில் [தப்தகுன்ட்] குளித்து, மறுபடியும் பத்ரி நாதரை தரிசிக்க சென்றோம்....
நிர்மால்ய தரிசனம் [காலை நடை திறக்கும் நேரம் இறைவரை தரிசிப்பது,] கண்டோம்
ஆத்ம  திருப்தியோடு  வெளியே  வந்தோம்
6.15 க்கு  எங்கள்  பயணம்  ஹர்துவார்  நோக்கி  செல்லும் பாதையில் ஆரம்பித்தது . ஒரு  மணி  நேரத்திற்குள்  வண்டி  நின்றது. காரணம்  சுமார்  500 மீட்டர்  தூரத்திற்கு  மலைசரிவு .
8 மணிக்கு  JCB வந்தது
30 நிமிடத்தில்  சாலையில் கிடந்த மலைகற்களை தூய்மை படுத்தியது
மீண்டும்  பயணம்
10 நிமிடத்தில் மீண்டும் வண்டி நின்றது.....
முதல்  நாள்  குவாலிஸ்  மாட்டிய  அதே  இடம். அதே  பயம். முதல்  நாள்  இருந்ததைவிட  மிக  மோசமாக  மலைசரிவு. அப்போதுதான் தூய்மை செய்து  முடித்திருந்தார்கள். வண்டி சக்கரம் மிகச்சரியாக சாலை ஓரமாக மெதுவாக செல்கிறது....ஈர சாலை. கொஞ்சம் நகர்ந்தாலும் வண்டி விழுந்துவிடும்........  உயிரை  கையில்  பிடித்து, இறைவனை  வேண்டியபடியே  அவ்விடத்தை  கடந்தோம் . ஆங்காங்கே   நீர்வீழ்ச்சி  தெரிகிறது. மலைகள்  தொடர்கிறது . நதி  பாய்கிறது . அத்தனையும்  பயம்  கலந்த  மிரட்சியோடு  கண்டு  களித்துக்கொண்டே இரவு  9.30  க்கு    ஹர்துவார்  வந்தடைந்தோம்
பேசிய பணத்தை சிற்றுந்து ஓட்டுனருக்கு அளித்து விட்டு அய்யப்ப மடத்தில் அறை எடுத்தோம்.... 
அப்போதும் ஒருமுறை கங்கை நதி பாயும் இடத்திற்கு சென்றோம்.......
[ஹர்துவாரில் கங்கா ஆர்த்தி [கங்கைக்கு நதிக்கு விளக்கு பூஜை] தினமும் நடக்கும்...
மிகுந்த விமரிசையாக பெரு விழாவாக நடக்கும்.......காண தவறாதீர்கள்]
அந்த விழ நடக்கும் இடத்திற்கு சென்றோம்.......
இறைவரின் திருத்தலை நீராம் கங்கை நதியை தொழுதோம் ......அங்கே பொருட்கள் வாங்கினோம்......மடத்திற்கு திரும்பினோம்........நிம்மதியாக தூங்கினோம்.......

21.08.2010. காலை  6.20 க்கு  டெல்லி  நோக்கி ரயிலில் பயணம். 11.30 க்கு  டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தோம். அன்று  இரவு  10.30 க்கு தான் தமிழ்நாடு  எக்ஸ்பிரஸ். எனவே இருந்த நேர இடைவெளியில்  டெல்லி கரோல்பர்க்  சென்றோம். ஷர்டுகள், ஜெர்கின்கள் இன்னும் சில பொருட்கள் வாங்கினோம். திரும்ப ரயில்நிலையம் வந்தடைந்தோம்.
ரயில் கிளம்பியது.....மறுநாள் முழுதும் ரயில் பயணம்........
23.08.2010 அன்று  காலை  7.40 மணி  அளவில்  சென்னை  வந்தடைந்தோம்.
யாத்திரை  பயணம்  முடிந்தது
மறுமுறையும் இதேபோன்று இறைதரிசன அனுபவத்தை அருள இறையை வேண்டி வணங்கி ஓம்  நமசிவாய என்ற கோஷத்துடன் யாத்திரையை முடித்தோம்.
             
இவ்வுலகத்தில்  உள்ள  அனைத்து  உயிரினங்களும் , சகல  சந்தோஷங்களையும்  பெற்று  நோய்நொடி  இல்லாத , அமைதியான , சந்தோஷமான ,நிம்மதியான வாழ்க்கை  வாழ  எல்லாம்  வல்ல  இறைவனை  வணங்கிகொள்கிறேன் .

இப்பயணத்தின்போது  நடந்த  பல  சம்பவங்களிலும் , அனுபவங்களிலும்  இறைவனை  அறிந்துகொள்ள ,தெரிந்துகொள்ள ,உணர்ந்துகொள்ள  நான்  முயற்ச்சித்தேன்
சிறிது  உணரவும்  முடிந்தது என்று நம்புகின்றேன்
இதுபோல் அனுபவம் ஏற்பட முதல்  காரணமாய் இருந்த எனது அண்ணன் விஜய்லெனின் ( 8 வது  முறையாக இப்பயணம் மேற்கொள்கிறார்))அவர்களுக்கும்
இம்முறை  கண்டிப்பாக  வரவேண்டும்  என்று வற்புறுத்தி அழைத்து  சென்ற  எனது  தம்பி  செந்தில் முருகன்(4 வது  முறையாக  இப்பயணம்  மேற்கொள்கிறார்)அவருக்கும்
எங்களோடு  வந்த மற்ற நண்பர்களுக்கும் எல்லாம்  வல்ல  இறைவன்  அருள்  புரிய தொழுகிறேன்.
முடிந்தால் அனைவரும்  திருக்கேதார நாதம் , பத்ரிநாதம் சென்று இறை நாதம் பெற இறைவனின் ஆசிகளை பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 இப்பயணத்திற்கு  புறப்படும்  முன்  எங்களுக்கு  வாழ்த்துக்கள்  கூறிய  அனைவருக்கும் , எங்கள்  நெஞ்சார்ந்த  நன்றிகள்.

எனக்கு  தெரிந்த தமிழ்நடையில் , எழுதி  இருக்கிறேன் . பிழைகளுக்கு மன்னிக்கவும். நன்றி.

                                                   ஜெய்  கேதார்நாத்கி ஜெய்
                                                   ஜெய் பத்ரினாத்கி ஜெய் 
                                                     ஓம் நமசிவாய
                                          தென்னாடுடைய  சிவனே போற்றி 
                                         என்னாட்டவர்க்கும்  இறைவா போற்றி

இவ்வாறு யாத்திரைக் கட்டுரை எழுதுவது, பல கட்டுரைகளை எழுத தோன்றுகிறது.....இந்த எண்ணங்களை மனதிற்குள் ஊன்றசெய்த இறைவருக்கும்தங்களுக்கும்மிக்க நன்றி......வணக்கம்......

நன்றி....வணக்கம்.....இறைவன் திருக்கருணையால் மீண்டும் ஒரு யாத்திரைக்கடுரையில் சந்திப்போம்.......